வடையக்காடு பகுதியில் குடிபோதையில் வாலிபர் அடித்துக் கொலை, 3 பேர் கைது
வடையக்காடு பகுதியில் குடிபோதையில் வாலிபரை அடித்து கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரும்பாவூர்,
ஆலப்புழா அருகே உள்ள நூறுநாடு அருகே உள்ள வடையக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 34). இவருடைய நண்பர்கள் பள்ளிக்குன்னம் ஸ்ரீராஜ் (32), காகஞ்சரம்மூடு சனு (29), கன்னானம்குழி சுனில்குமார் (34). இவர்கள் 4 பேரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். அப்போது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் 4 பேரும் ஒன்றாக அமர்ந்து கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ரஞ்சித் என்பவர் மற்றவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்த ரஞ்சித்தை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையொட்டி 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனிய் பி.கோரா, மாவேலிகரா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார், நூறுநாடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் வி.பிஜு, ஸ்ரீதரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ரஞ்சித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஸ்ரீராஜ், சனு, சுனில்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை வழக்கு தொடர்பாக தாமரைக்குளத்தை சேர்ந்த ஷானு என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.