மங்களூருவில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமேசுவரத்துக்கு விரைவில் ரெயில் இயக்கப்படும் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா தகவல்

மங்களூருவில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமேசுவரத்துக்கு விரைவில் ரெயில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா தெரிவித்தார்.

Update: 2018-08-03 22:30 GMT

பொள்ளாச்சி,

கடந்த மாதம் 24–ந்தேதி சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் சென்றவர்கள் தடுப்பு சுவரில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ரெயிலில் விதிமுறைகளை மீறி அத்துமீறி செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று காலை 8.50 மணிக்கு பொள்ளாச்சிக்கு தென்னக ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் பி.கே.மிஸ்ரா வந்தார். பின்னர் அவர் ரெயில் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் தண்டவாளங்கள் சரியான முறையில் அமைக்கப்பட்டு உள்ளதா? என்று அளவீடு மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து தண்டவாளத்திற்கும் பிளாட்பாரத்திற்கும் உள்ள தூரம் சரியாக உள்ளதா? என்பது குறித்தும் நேரடியாக அளவீடு செய்தார். மேலும் தண்டவாளத்தின் அருகில் அமைக்கப்பட்டு உள்ள சிக்னல் கம்பத்திற்கும் தண்டவாளத்திற்கும் எவ்வளவு தூரம் உள்ளது. இதனால் ரெயிலில் வருபவர்கள் மோத வாய்ப்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது பாலக்காடு கோட்ட மேலாளர் பிரதாப்சிங் ஷாபி மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.ஆய்வுக்கு பின் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா கூறியதாவது:–

சென்னையில் மின்சார ரெயிலில் சென்றவர்கள் தடுப்பு சுவரில் மோதி இறந்தது விபத்து அல்ல சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ரெயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. படிக்கட்டில் பயணம் செய்வது, செல்போன் பேசிக் கொண்டு தண்டவாளங்களை கடப்பது, ஓடும் ரெயிலில் ஏறுவது போன்றவற்றை பயணிகள் தவிர்க்க வேண்டும். இது குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மங்களூருவில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமேசுவரத்துக்கு ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்து உள்ளது. விரைவில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி–கோவை இடையே கூடுதல் பயணிகள் ரெயில் இயக்குவது மற்றும் கோவில் பாளையத்தில் மீண்டும் ரெயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்