அம்பர்நாத்தில் மாயமான சிறுவன் தலையில் கல்லைப்போட்டு கொலை வாலிபர் கைது

அம்பர்நாத்தில் மாயமான சிறுவன் அங்குள்ள மலைப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டான்.

Update: 2018-08-03 00:00 GMT
அம்பர்நாத், 

அம்பர்நாத்தில் மாயமான சிறுவன் அங்குள்ள மலைப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டான். சிறுவனை தலையில் கல்லைப்போட்டு கொன்ற வாலிபவரை போலீசார் கைது செய்தனர்.

1-ம் வகுப்பு மாணவன்

தானே மாவட்டம் அம்பர்நாத் புவாபடா பகுதியை சேர்ந்தவர் ரஜக். இவரது மகன் சிவம்(வயது7). அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை சிறுவனின் தாய் பால் வாங்கி வரும்படி கூறினார். இதனை தொடர்ந்து சிவம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றான். இந்தநிலையில் வெகுநேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த தாய் சம்பவம் குறித்து கணவர் ரஜக்கிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பெற்றோர் சிறுவனை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்காமல் போனதால் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் நேற்று காலை புவபாடாவில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் சிறுவன் சிவம் தலை நசுங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டான். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கிடந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் சிறுவனை அதே பகுதியை சேர்ந்த அர்ஜுன் குமார்(20) என்பவர் கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. அர்ஜுன் குமாரை சமீபத்தில் நடந்த சண்டையின்போது சிவனின் தந்தை தாக்கியுள்ளார். இதனால் அவரை பழிவாங்க சிறுனை கடத்தி சென்று தலையில் கல்லை போட்டு தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்