பெட்ரோல், டீசல், மதுவை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் தமிழகத்துக்கு 35 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்படும்

‘பெட்ரோல், டீசல், மதுவை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் தமிழகத்துக்கு 35 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்படும்’ என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

Update: 2018-08-03 00:00 GMT
வேலூர், 



வேலூரில் நேற்று அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் அனைத்து நடைமுறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. முன்பு பத்திரம் பதிவு செய்ய 3 அல்லது 4 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. தற்போது ஆன்-லைன் மூலம் 10 நிமிடங்களில் பத்திரப்பதிவு முடிவடைந்து விடுகிறது. தற்போது வேலூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் திருமணம், சீட்டு நடத்துவது, சங்கம் பதிவு உள்பட 17 இனங்கள் ஆன்-லைனில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், மதுவை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். குறிப்பாக தமிழகத்திற்கு 35 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்படும். மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வரியினம், மத்திய அரசுக்கு நேரடியாக சென்று விடும். இதனால் மாநில அரசுக்கு நிதிபற்றாக்குறை ஏற்பட்டு மத்திய அரசிடம் கையேந்தும் நிலை ஏற்படுவதோடு மாநில சுயாட்சி பாதிக்கப்படும். எனவே, பெட்ரோல், டீசல், மதுவை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரக்கூடாது.

வேலூரை அடுத்த ஊசூரில் ரூ.18 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விளையாட்டு மைதானம் ஆரம்பிக்கப்படும். அதற்கான கட்டிடப்பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்