இந்த ஆண்டு 15 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.412 கோடி கடனுதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 15 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.412 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது என்று மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-02 23:51 GMT
திருவண்ணாமலை,



திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரவீன் பி.நாயர் தலைமை தாங்கி பேசியதாவது:-

பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒன்றாக இணைந்து செயல்படுவதற்காக மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 6 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி வங்கி இணைப்புடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 15 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.412 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மகளிர் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கப்பட்டு வருவதன் மூலமாக தற்போது ரூ.6 ஆயிரம் கோடி சேமிப்பாகவே வங்கிகளில் உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மகளிர் குழுக்கள் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.41 ஆயிரம் கோடி கடனுதவி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களை இ-மதி என்ற திட்டத்தின் மூலம் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின்படி நபார்டு மூலம் ஆன்லைன் முறையில் வங்கிகளுடன் மகளிர் குழுக்கள் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் சுய உதவிக்குழுக்கள் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும், சுய உதவிக்குழுவினர் மாதம் ஒரு முறை தங்கள் வங்கி கணக்கு அறிக்கையினை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி, மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர் சம்பத், மாநில திட்ட மேலாளர் காந்தி காளிதாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட மேலாளர் ஜெயசுதா மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் கூட்டமைப்பு மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக மேலாண்மை இயக்குனர் பிரவீன் பி.நாயர், கலெக்டர் கந்தசாமி ஆகியோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டப் பயனாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனை பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டனர். 

மேலும் செய்திகள்