ஆத்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

ஆத்தூர் அருகே ‘ஹெல்மெட்‘ அணிந்து வந்த மர்ம கும்பல் அ.தி.மு.க. பிரமுகரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

Update: 2018-08-02 23:39 GMT
பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருபவர் உமாபதி(வயது 50). இவர் அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனது பழக்கடையை பூட்டிக்கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் ‘ஹெல்மெட்‘ அணிந்து கொண்டு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் உமாபதியின் கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறங்கினார்கள்.

அரிவாள் வெட்டு

உடனே அந்த கும்பல் உமாபதியை சுற்றி வளைத்தது. அப்போது அந்த கும்பலில் ஒருவன் அரிவாளால் உமாபதியின் முகத்தில் வெட்டினான். இதில் அவர் கைகளால் அந்த அரிவாளை தடுக்க முயன்றார். ஆனால் மர்ம நபர் வெறித்தனமாக கைகளிலும், தலையிலும் வெட்டினான்.

இதில் முகத்தின் ஒருபுறம் பிளந்து ரத்தவெள்ளத்தில் உமாபதி சுருண்டு விழுந்தார். அப்போது பின்னால் நின்ற மற்றவர்கள் இரும்பு கம்பியால் ஓங்கி தாக்கியதில் அவர் அலறியபடி மயக்கம் அடைந்தார். அதேநேரத்தில் உமாபதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதைபார்த்த அந்த மர்ம கும்பலை சேர்ந்த 4 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இதனிடையே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய உமாபதியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் புத்திரகவுண்டன்பாளையம் பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் உமாபதியை கொலை செய்ய முயன்ற 4 பேர் யார் என்பதை கண்டுபிடிக்க பழக்கடையின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் தொழில் போட்டியா? அரசியல் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்