எம்.எல்.ஏ. அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
திண்டுக்கல்லில், எம்.எல்.ஏ. அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அந்த கட்சியினர், திருவண்ணாமலையில் இருந்து நடைபயணம் சென்றனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்தாலும் நடைபயணம் தொடரும் என்று மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்தநிலையில் திண்டுக்கல்லில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார்.
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை உடனே விடுவிக்க வேண்டும். 8 வழிச்சாலைக்கு எதிராக நடைபயணம் செல்ல போலீசார் அனுமதிக்க வேண்டும், என்றார்.
எம்.எல்.ஏ. அலுவலத்தை முற்றுகையிட்டது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.