மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் கடன் கோரும் விண்ணப்பங்கள் பெறும் முகாம்

மாவட்டத்தில் விவசாயம் உள்பட அனைத்து வகை கடன்களை கோரும் விண்ணப்பங்கள் பெறும் முகாம், 12 ஒன்றியங்களிலும் நடைபெற உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-02 22:15 GMT
சிவகங்கை,

கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆகியோருக்கான அனைத்து வகை கடன்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான ஆடு வளர்ப்பு, கறவை மாடு வளர்ப்பு, சொட்டு நீர்ப்பாசனம் ஆகியவற்றிற்கான கடன் கோரும் விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் சிவகங்கை, இளையான்குடி உள்பட 12 ஒன்றியங்களிலும் வருகிற 10-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கான விண்ணப்பங்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.

மேலும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்படவுள்ள 12 ஒன்றியங்களிலும் உள்ள விவசாய மக்களை அதிகாரிகள் நேரில் சென்று அணுகி கடன் விண்ணப்பங்கள் பெறுவதோடு, கடன் வழங்குதல் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் களைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். எனவே, மேலே குறிப்பிடப்பட்ட நாட்களில் நடைபெறும் கடன் முகாமிற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் நேரில் வருகை தந்து கடன் கோரும் மனுக்களை வழங்கி அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்