கை நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் 2 குழந்தைகளின் தாய் மர்ம சாவு
கைநரம்பு அறுக்கப்பட்ட நிலையில் 2 குழந்தைகளின் தாய் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பூந்தமல்லி,
சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச்சேர்ந்தவர் சங்கரசுப்பு (வயது44). இவர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி (35), இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று மதியம் வழக்கம் போல் மளிகை கடையில் இருந்து மதிய உணவிற்காக சங்கரசுப்பு வீட்டிற்கு சென்றார். அப்போது படுக்கை அறையில் தமிழ்செல்வி கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு ரத்தம் வடிந்தபடி மயக்க நிலையில் இருந்து உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கரசுப்பு அலறினார்.
மர்ம சாவு
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்துவிட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தமிழ்செல்வியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தமிழ்செல்வியை பரிசோதனை செய்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கொலையா? தற்கொலையா?
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழ்செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப தகராறு காரணமாக தமிழ்செல்வி கை மணிக் கட்டு நரம்பை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.