அண்ணாநகரில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை அண்ணாநகரில், கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-08-02 20:45 GMT
அம்பத்தூர், 

சென்னை அண்ணாநகர் பார்க் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் மித்ரா(வயது 43). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவரது சொந்த ஊர் டெல்லி ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக இந்த குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

அண்ணாநகர் 13-வது பிரதான சாலையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். கடந்த 3 நாட்களாக இவர் வேலைக்கு செல்லவில்லை. அலுவலகத்தில் இருந்து அவரது செல்போனுக்கு போன் செய்தபோதும் அவர் எடுக்கவில்லை.

தூக்கில் பிணமாக தொங்கினார்

இந்தநிலையில் அவரது வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் இதுபற்றி கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தனர். அங்கு படுக்கை அறையில் நவீன் மித்ரா, உடல் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் என்ன?

கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் நவீன் மித்ராவை அக்கம் பக்கத்தினர் பார்த்து உள்ளனர். அதன்பிறகு 3 நாட்களாக அவரது வீடு பூட்டியே கிடந்து உள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமை இரவு அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து தூக்கில் தொங்கிய அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக அவர், கடந்த 3 ஆண்டுகளாக இங்கு வந்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.

எனவே அவர், குடும்ப பிரச்சினையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்