சென்னை விமானநிலையத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல வந்தவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஜாபர் அலி(வயது 30) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அவரது சூட்கேசில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ஜாபர் அலியின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவர் இலங்கைக்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர்கள், ஹவாலா பணமா?. இந்த கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.