தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.குறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 51). இவரது மகன் ரஞ்சித்(23), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ரஞ்சித்தை மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முனியன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் உடல் நலக்கோளாறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? குடும்ப பிரச்சினை காரணமாகவா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.