ஆபத்தை உணராமல் செல்பி மோகத்தால் வனப்பகுதிக்குள் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்

ஆபத்தை உணராமல் அத்துமீறி வனப் பகுதிக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுடன் செல்பி எடுக்கின்றனர். எனவே வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-02 23:00 GMT
கூடலூர்,

கூடலூர், முதுமலை வனப்பகுதியில் காட்டு யானை, மான், சிறுத்தை, காட்டெருமை, கரடி, செந்நாய், புலி போன்ற வனவிலங்குகள் உள்ளன. கடந்த மே மாதம் வரை கடும் வறட்சியால் பசுமை இழந்து வனப்பகுதி காணப்பட்டது. இதனால் பசுந்தீவன தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் வனவிலங்குகள் அதிகளவு இடம் பெயர்ந்தன. தற்போது கூடலூர் பகுதியில் பருவமழை பெய்து வருவதால், பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் முதுமலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் முதுமலை வழியாக மைசூரு, மசினகுடிக்கு செல்லும் சாலைகளின் இருபுறமும் வனவிலங்குகள் அதிகளவு சுற்றித்திரிவதை காண முடிகிறது. புள்ளிமான்கள், காட்டு யானைகள், காட்டெருமைகள் கூட்டமாக புற்களை மேய்ந்து வருகிறது. அதில் காட்டு யானைகள், காட்டெருமைகள் எளிதில் மனிதர்களை தாக்கும் தன்மை உடையவை. இதை உணராமல் வாகனங்களில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியால் வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பது, சத்தமிட்டு இடையூறு செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்தல், கூச்சலிட்டு விரட்ட முயல்வது உள்ளிட்ட காரியங்களில் சுற்றுலா பயணிகள் ஈடுபடக்கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. தற்போது செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதும் அதிகரித்து வருகிறது. ஆனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் திடீரென தாக்கும் அபாயம் உடையவை என்பதை அவர்கள் உணருவதில்லை.

இதனால் ஆபத்தை உணராமல் செல்போன்களில் புகைப்படம் எடுத்தல், செல்பி எடுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு வனப்பகுதிக்குள் அத்துமீறி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தனர். மேலும் அபராதம் விதித்து வசூலித்து வந்தனர். தற்போது மழைக்காலம் என்பதால் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொள்வது இல்லை. இதை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளை செல்பி எடுக்கும் செயல்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

முதுமலை புலிகள் காப்பகம் மட்டுமின்றி கூடலூர் பகுதியிலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உடனே தாக்கும் தன்மை கொண்டவை. ஆனால் வெளியூர் பயணிகள் வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்பதை உணராமல் அதனருகே சென்று புகைப்படம் எடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொண்டால் மட்டுமே சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும். எனவே இனி வரும் காலங்களில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்