டிரான்ஸ்பார்மரில் தாமிரகம்பியை எடுக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி பலி

மயிலாடுதுறையில் தாமிரகம்பியை எடுக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

Update: 2018-08-02 22:45 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாடு எடத்தெருவை சேர்ந்த மாக்கான் ரமேஷ் என்கிற ரமேஷ் (வயது 50). இவர், தற்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மயிலாடுதுறை அய்யாறப்பர் தெற்குவீதியில் கிடந்த குப்பைகளை ரமேஷ் சேகரித்து கொண்டிருந்தார். அந்த தெருவில் இருக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே சென்றபோது அதில் தாமிர கம்பி தொங்குவதை பார்த்த ரமேஷ், அதனை எடுக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி ரமேஷ் பலியாகி விட்டார். அவரது உடல் டிரான்ஸ்பார்மரிலேயே தொங்கியபடி கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டிருந்த ரமேசின் உடலை மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் கயிறு கட்டி இறக்கினர். இதனை தொடர்ந்து போலீசார், ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்