பாளையங்கோட்டை சிறையில் இருந்து தூத்துக்குடி வக்கீல் உள்பட 2 பேர் விடுதலை குண்டர்–தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானவர்கள்

குண்டர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி வக்கீல் உள்பட 2 பேர் நேற்று பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2018-08-02 22:00 GMT

நெல்லை,

குண்டர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி வக்கீல் உள்பட 2 பேர் நேற்று பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22–ந்தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக, போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து பலரை கைது செய்தனர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வக்கீல் அரிராகவன் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த போராட்டக்குழு நிர்வாகி மகேஷ் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

2 பேர் விடுதலை

இதற்கு எதிராக 2 பேர் தரப்பிலும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, 2 பேரையும் குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவு நகல் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை அரிராகவன் மற்றும் மகேஷ் ஆகியோர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாசலில் அவர்களை தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

நிரந்தரமாக மூட வேண்டும்

அப்போது வக்கீல் அரிராகவன் கூறியதாவது:–

தமிழக அரசும், காவல் துறையும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கூட்டு சதி செய்து உள்ளனர். எந்த ஆவணமும், ஆதாரமும் இல்லாமல் பொதுமக்களை கைது செய்து உள்ளனர். வரலாற்றில் இல்லாத அளவுக்கு போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மேலும் தற்போதும் போலீசார் பொதுமக்களை கைது செய்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தமிழக அரசு மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு திறமையான வக்கீலை நியமித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிராம மக்களுக்கு ஆதரவாக நாங்கள் தொடர்ந்து சட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த அரசு பல்வேறு அவதூறுகளை கூறி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை யாரும் தூண்டி விடவில்லை. மக்கள் எழுச்சியால் இந்த போராட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மீண்டும் தூத்துக்குடியில் கால் வைக்க கூடாது என்பதே தூத்துக்குடி மக்களின் முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து போராடுவோம்

மகேஷ் கூறுகையில், ‘‘தூத்துக்குடியில் அறவழியில் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை போலீசார் கலவரமாக மாற்றினர். அதில் 13 பேரை கொன்று விட்டனர். அதன்பிறகு பொய் வழக்குகள் போட்டு பலரை கைது செய்து வருகின்றனர். ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து 54 நாட்கள் கழித்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளோம். தூத்துக்குடி கலவரம் மற்றும் 13 பேர் கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது உயிர் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்