பால் வேனில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்
காட்பாடியில் பால் வேனில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
காட்பாடி,
வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவின்பேரிலும், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் அறிவுரையின்பேரிலும் காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜூ, தனி வருவாய் ஆய்வாளர் நடராஜன் மற்றும் குழுவினர் நேற்று மாலை காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள டோல்கேட்டில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலூரில் இருந்து சித்தூரை நோக்கி வேகமாக வந்த ஒரு பால் வேனை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். ஆனால் அந்தப் பால் வேன் நிற்காமல் வேகமாக சென்றது.
சந்தேகமடைந்த அதிகாரிகள் காரில், பால் வேனை விரட்டிச் சென்றனர். உடனே டிரைவர் பால் வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். அதிகாரிகள் பால்வேனை சோதனைச் செய்தபோது, அதில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பால் வேனுடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காட்பாடி தாலுகா அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். தப்பி ஓடிய பால்வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.