உடுமலையில் காற்றாலை நிறுவன மேலாளர் வீட்டில் திருடிய வழக்கில் வாலிபர் கைது: 89 பவுன் நகைகள் மீட்பு

உடுமலையில் தனியார் காற்றாலை நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 89 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

Update: 2018-08-01 23:45 GMT
உடுமலை, 

உடுமலை ஸ்டேட் பாங்க் காலனி சவுந்திரராஜ் லே அவுட்டை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 50). இவர் உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலத்தில் உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 5-ந் தேதி வெற்றிவேல் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்து இருந்த நெக்லஸ், வளையல்கள், தோடுகள் என மொத்தம் 89 பவுன்நகையை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து உடுமலை போலீசில் வெற்றிவேல் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை பிடிக்க உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகணேஷ், ஏட்டுகள் பஞ்சலிங்கம், லிங்கேஸ்வரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் நேற்று உடுமலை காந்திநகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டரில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் ஸ்கூட்டரை திருப்பிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் ஷாலு (வயது 32), கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் உடுமலை-பெதப்பம்பட்டி நால்ரோட்டில் பொட்டியநாயக்கனூர் தோட்டத்து சாளையில் தங்கி இருந்ததும், உடுமலை வெற்றிவேல் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஷாலுவை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவர் குடியிருந்து வந்த தோட்டத்து சாளையில் மறைத்து வைத்து இருந்த 89 பவுன்நகைகளை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சமாகும்.

இதையடுத்து மீட்கப்பட்ட நகைகளை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பார்வையிட்டார். மேலும் தனிப்படை போலீசாரை அவர் பாராட்டினார். கைது செய்யப்பட்ட ஷாலு ஏற்கனவே கேரளாவில் இதே போன்று பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றதாக அவர் மீது கேரள போலீசார் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை பெற்று, தண்டனை முடிந்து வெளியே வந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்