திருத்தணி அருகே பள்ளி பஸ் மீது மினி பஸ் மோதல்: மாணவ, மாணவிகள் உள்பட 20 பேர் காயம்
திருத்தணி அருகே பள்ளி பஸ் மீது மினி பஸ் மோதியதில் மாணவ, மாணவிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
திருத்தணி,
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் திருத்தணி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளை அழைத்து வர பள்ளியின் சார்பில் பஸ் இயக்கப்படுகிறது.
வழக்கம்போல நேற்று காலை திருத்தணி அருகில் உள்ள மத்தூரில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் புறப்பட்டது. புச்சிரெட்டி பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகே செல்லும்போது எதிரில் அம்மயார்குப்பத்தில் இருந்து மத்தூருக்கு மினி பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது.
இதைபார்த்த பள்ளி பஸ் டிரைவர் பாலு பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். ஆனால் எதிரே வந்த மினி பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பஸ்சின் முன்பக்கத்தில் மோதியது.
20 பேர் காயம்
இந்த விபத்தில் மினி பஸ் டிரைவர் விநாயகம் படுகாயம் அடைந்தார். இதில் அவரது கால் முறிந்தது. மேலும் பள்ளி பஸ்சில் பயணம் செய்த ஆசிரியை ஈஸ்வரி (வயது 25), மாணவிகள் வான்மதி (12), வர்ஷினி (12) டிரைவர் பாலு (24) மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில் விநாயகம், பாலு, ஈஸ்வரி, வான்மதி, வர்ஷினி ஆகியோர் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றனர்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி ஆர்.டி.ஓ. பவனந்தி, தாசில்தார் செங்கலா, திருத்தணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரந்தாமன், இளங்கோவன், மோட்டார் வாகன ஆய்வாளர் அமிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.