திருவண்ணாமலை பஸ் நிலைய கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

கலர் பவுடர் அதிகளவில் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களும், காலாவதியான குளிர்பானங்களும் விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு புகார்கள் வந்தன.

Update: 2018-08-01 22:29 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள குளிர்பான கடைகளில் கலர் பவுடர் அதிகளவில் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களும், காலாவதியான குளிர்பானங்களும் விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் சோதனை நடத்த அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலேஷ்குமார் (வந்தவாசி), மோகன்குமார் (திருவண்ணாமலை), சந்திரமோகன் (ஆரணி), சந்திரசேகர் (வெம்பாக்கம்) ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் ஒவ்வொரு கடைக்கும் நேரில் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களில் காலாவதி தேதி, தின்பண்டங்களில் விற்பனை விலை, உற்பத்தி நிறுவனத்தின் பெயர், ரசாயன கலர் பவுடர் சேர்க்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்தனர். மேலும் டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தனர். இதையடுத்து காலாவதியான குளிர்பானங்களை அங்கேயே அழித்தனர். மேலும் ஒரு சில கடைகளில் போதை பாக்கு போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பெருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்