இளம்பெண்ணை கொன்று உடல் கிணற்றில் வீச்சு காதலன் கைது

கச்சிராயப்பாளையம் அருகே இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர். திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொலை செய்ததாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-08-01 22:13 GMT
கச்சிராயப்பாளையம்,



இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மதியம் சிலர் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவர்கள் கிணற்றின் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது கிணற்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சண்முகம், கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், மாணிக்கராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.


விசாரணையில் இறந்து கிடந்தது கச்சிராயப்பாளையம் அருகே உள்ள வடக்கநந்தல் காமராஜர் நகரை சேர்ந்த அழகப்பிள்ளையின் 2-வது மகள் அமராவதி (வயது 20) என்பதும், கடந்த 28-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அமராவதியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்று அமராவதி பயன்படுத்திய நோட்டு-புத்தகம் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரை காதலிப்பதாக எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அமராவதி இறந்து கிடந்தது குறித்து ராமநாதன் மகன் குணசேகரனிடம்(28) போலீசார் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அமராவதி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவரது உடலை கிணற்றில் வீசியதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர்.

போலீசாரிடம் குணசேகரன் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நானும், டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ள அமராவதியும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த 28-ந் தேதி இரவு செல்போனில் தொடர்பு கொண்ட அமராவதி, தனது வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளி பகுதிக்கு வருமாறு கூறினார். உடனே நான் இரவு 9 மணி அளவில் அங்குள்ள விளை நிலத்துக்கு சென்று காத்திருந்தேன். பின்னர் அமராவதி வந்ததும் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர், நான் வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரத்தை எடுத்து வந்துள்ளேன். நாம் கேரளாவுக்கு சென்று திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.


ஆனால் அமராவதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த நான் துப்பட்டாவால் அமராவதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் அவர் இறந்ததை உறுதி செய்ததும் உடலை அங்கிருந்த கிணற்றில் வீசினேன்.

பின்னர் அவர் கொண்டு வந்திருந்த ரூ.20 ஆயிரத்தை வீட்டுக்கு எடுத்து வந்து, கடந்த 4 நாட்களாக செலவு செய்தேன். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியிருந்தார்.

இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, உடலை கிணற்றில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்