சாதிய கொடுமையால் சத்துணவு பெண் பணியாளர் பாதிக்கப்பட்ட விவகாரம்: விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

சாதிய கொடுமையால் சத்துணவு பெண் பணியாளர் பாதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2018-08-01 22:30 GMT
திருப்பூர், 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்ட கிளையின் மாவட்ட செயலாளர் நந்தகோபால் தலைமையில், தலைவர் குமார், ரவிசங்கர் (வி.சி.க.), கருணாகரன்(தி.க.), முகில்ராசு(தி.வி.க.), முத்து குமார்(த.பெ.தி.க.), வேந்தன் மகேஷ்(ஆதித்தமிழர் பேரவை), பவுத்தன்(ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை) உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு கயல் விழியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூன் மாதம் அவினாசி வட்டம், குட்டகம் ஊராட்சி, திருமலைக்கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் சத்துணவு பணியாளராக பாப்பாள் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பாப்பாளை பள்ளியில் சமையல் செய்ய அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வெளியேற்றினார்கள். இதற்கு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் உறுதுணையாக இருந்து பாப்பாளை அந்த பள்ளியில் இருந்து பணி இடமாறுதல் செய்தனர்.

இதையடுத்து பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, பாப்பாளை தீண்டாமை கொடுமைக்கு ஆட்படுத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எஸ்.சி., எஸ்.டி. தேசிய ஆணையமும் தலையிட்டு விசாரணை செய்து வருகிறது. இதன்படி கடந்த பல நாட்களாக இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிலும் முக்கிய நபர்களான ராஜாமணி, சின்னதம்பி, ராமமூர்த்தி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்யாமலே இருந்து வருகின்றனர்.

இதனால் மீதமுள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கை அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி விசாரணை அதிகாரியாக இருந்து விசாரணை நடத்தி வருகிறார். இது பாதிக்கப்பட்டவருக்கு உரிய முறையில் நீதி கிடைப்பதை தாமதப்படுத்தும் என்பதால், விசாரணை அதிகாரியை மாற்றி வேறு ஒரு நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்