கள்ளக்குறிச்சி தனியார் நிதி நிறுவன கிடங்குக்கு ‘சீல்’ வைப்பு
விவசாயிகளிடம் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்து பணம் மோசடி செய்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி தனியார் நிதி நிறுவன கிடங்குக்கு கோர்ட்டு உத்தரவுபடி போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
கள்ளக்குறிச்சி,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வியாபாரி சின்னக்கண்ணு (வயது 38), லாரி டிரைவர் ராஜா(39). இவர்கள் 2 பேரும் கரூர் மாவட்டம் நச்சலூர், கொடக்கம், வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 63 கிலோ எடை கொண்ட 29 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்த னர். இதன் மொத்த மதிப்பு ரூ.3½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் முதற்கட்டமாக அந்த விவசாயிகளுக்கு ரூ.25 லட்சத்தை கொடுத்தனர். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து விவசாயிகள் சின்னக்கண்ணு மற்றும் ராஜாவிடம் கேட்டதற்கு அவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நச்சனூரை சேர்ந்த விவசாயிகள் சுப்பிரமணி, ரவிச்சந்திரன், பாலசுப்பிரமணியன், பிரகாஷ் உள்ளிட்டோர் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னக்கண்ணு, அவரது மனைவி கவுசல்யா, ராஜா ஆகியோர் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்குரிய தொகையான ரூ.3 கோடி வரை கொடுக்காமல் மோசடி செய்ததும், அந்த நெல் மூட்டைகளை 2 தனியார் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து கவுசல்யா பெயரில் ரூ.1 கோடியே 77 லட்சம் கடன் பெற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுபடி அந்த தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமாக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூரில் உள்ள நெல் மூட்டைகள் வைத்திருந்த கிடங்குக்கு கரூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் அம்சவேணி, சந்தோஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சீல் வைத்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள சின்னக்கண்ணு உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.