பால்கர் அருகே அரசு பஸ் கவிழ்ந்தது; 60 பயணிகள் உயிர் தப்பினர் சாலையோர மரங்களால் பெரும் விபத்து தவிர்ப்பு

பால்கர் அருகே சாலையோரத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அங்கிருந்த மரங்களால் பஸ் பள்ளத்தில் பாய்வது தவிர்க்கப்பட்டு பள்ளி மாணவர்கள் உள்பட 60 பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2018-08-02 00:15 GMT
வசாய், 

பால்கர் அருகே சாலையோரத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அங்கிருந்த மரங்களால் பஸ் பள்ளத்தில் பாய்வது தவிர்க்கப்பட்டு பள்ளி மாணவர்கள் உள்பட 60 பயணிகள் உயிர் தப்பினர்.

அரசு பஸ் கவிழ்ந்தது

பால்கர் மாவட்டம் டேம்பிகோட்வே கிராமத்தில் இருந்து நேற்று காலை சாபாலே நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 60 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் மஞ்சூரிலி கிராமம் அருகே வந்த போது எதிரே ஒரு வாகனம் வேகமாக வந்தது.

வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பியுள்ளார். அப்போது திடீரென அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த சாலையோரத்தின் அருகில் பள்ளம் ஒன்று உள்ளது.

மரங்களால் அசம்பாவிதம் தவிர்ப்பு

அதிர்ஷ்டவசமாக சாலையோரத்தில் வரிசையாக நிற்கும் மரங்கள் தடுப்பு அரண்களாக இருந்ததால் அந்த பஸ் பள்ளத்தில் விழாமல் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. மரங்கள் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் அந்த பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து பெரியளவில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

இருப்பினும் பஸ் கவிழ்ந்த இந்த விபத்தில் 11 பயணிகள் காயம் அடைந்தனர். மஞ்சூரிலி கிராம மக்கள் ஓடி வந்து பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்களை வெளியே மீட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அண்மையில் ராய்காட்டில் 500 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்த விபத்தில் 33 பேர் பலியானார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்