சென்னையை அடுத்த தாழம்பூரில் ஆயிரம் கிலோ குட்கா போதைப்பொருள் பறிமுதல் 3 பேர் கைது
சென்னை சிறுசேரியை அடுத்த தாழம்பூரில் குடோனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட சுமார் ஆயிரம் கிலோ குட்கா போதைப்பொருள் மூட்டை மூட்டையாக சிக்கியது.
அடையாறு,
அடையாறு சுற்றுவட்டார பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைபாக்குகள் கடைகளில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை யடுத்து, அதுபற்றி அடையாறு துணை கமிஷனர் செஷாய் சாய் தலைமையிலான தனிப்படை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், அடையாறு துணை கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு டீக்கடையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 42) என்பவர் சிகரெட் பாக்கெட்டுகளை சப்ளை செய்த போது, சந்தேகத்தின் பேரில் அவரது வாகனத்தில் இருந்த பெட்டியை தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் சிகரெட் பண்டலுடன் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
மடக்கிப் பிடித்தனர்
இதைத்தொடர்ந்து, பிடிபட்ட மஞ்சுநாதனிடம் சாஸ்திரி நகர் போலீசார் நடத்திய விசாரணையில், திருவான்மியூரைச் சார்ந்த வடிவழகன் (38) என்பவர்தான் தனக்கு குட்கா பாக்கு சப்ளை செய்ததாக தெரிவித்தார்.
அதன்பேரில் வடிவழகனை பிடித்த போலீசார் அவரிடம் விசாரித்ததில், சிறுசேரியை அடுத்த தாழம்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் (36) என்பவர் மொத்தமாக குட்கா போதை பாக்குகள் விற்பனை செய்வதாகவும், அவரிடம் இருந்து அவற்றை வாங்கி, அடையாறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தான் சப்ளை செய்வதாகவும் கூறினார்.
அதன்பிறகு போலீசார் தாழம்பூரில் உள்ள ஜெயராஜ் வீட்டுக்கு சென்று அவரை மடக்கிப் பிடித்தனர்.
ஜெயராஜ் அளித்த தகவலின் பேரில் அங்குள்ள ஒரு குடோனுக்கு சென்ற போலீசார், அங்கு 69 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட சுமார் ஆயிரம் கிலோ குட்கா போதைப் பாக்கை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மஞ்சுநாதன், வடிவழகன் மற்றும் ஜெயராஜை கைது செய்த சாஸ்திரி நகர் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன், மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.