வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டம்; போலீசார் தடியடி

வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி, இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.

Update: 2018-08-01 23:00 GMT

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு போலீஸ்சரகத்தில் உள்ளது பட்டூர். இங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் சபரீஸ்வரன் (வயது 21). டிராக்டர் டிரைவரான இவர் மர்மகும்பலால் கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து வாலிபரின் உடல் வைக்கப்பட்டுள்ள மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் குவிந்தனர். இந்தநிலையில் தென்மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 400–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.

அப்போது இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், அரசு நிவாரணம் மற்றும் இறந்தவரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை நடந்த போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலூர், மேலவளவு, பட்டூர் ரோட்டில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மேலூர் தாசில்தார் சரவணன், மாவட்ட சூப்பிரண்டு மணிவண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இறந்த சபரீஸ்வரன் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 தாசில்தார் வழங்கினார். தொடர்ந்து 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இறந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் பட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்