சங்கரன்கோவிலில் டிப்ளமோ என்ஜினீயருக்கு அடி–உதை 6 பேர் கைது; 3 மாணவர்களுக்கு வலைவீச்சு

சங்கரன்கோவிலில் டிப்ளமோ என்ஜினீயரை அடித்து உதைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-01 21:30 GMT

சங்கரன்கோவில்.

சங்கரன்கோவிலில் டிப்ளமோ என்ஜினீயரை அடித்து உதைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

டிப்ளமோ என்ஜினீயர்

சங்கரன்கோவில் கணபதிநகர் 6–ம் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் அண்ணாமலை (வயது21). இவர் டிப்ளமோ என்ஜினீயர். இவரின் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர் மாடுகளை அழைத்து கொண்டு திருப்பூர்குமரன் நகர் பகுதியில் சென்றுள்ளார். அப்போது அந்த தெருவில் இருந்த சில இளைஞர்கள் எங்கள் தெரு வழியாக எப்படி மாடுகளை அழைத்து செல்லலாம் என தகராறு செய்தனர். அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அவரை அங்கிருந்து மாடுகளுடன் அனுப்பி உள்ளனர்.

அடி–உதை

இந்நிலையில் இந்த சம்பவத்தை தட்டி கேட்க அண்ணாமலை தனது நண்பர்களுடன் திருப்பூர் குமரன்நகர் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி உள்ளது. அண்ணாமலையை அந்த பகுதியை சேர்ந்த தங்கவேலு மகன் பாடாலிங்கம், ஆவுடையப்பன் மகன் சங்கர், சுப்பிரமணியன் மகன் மணிகண்டன், சண்முகவேல் மகன் செந்தில்நாதன், கார்த்திக், கண்ணன், சண்முகவேல், குண்டுத்தெருவை சேர்ந்த சதீஷ், சங்கரபாண்டி ஆகியோர் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.

6 பேர் கைது

இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், மணிகண்டன், செந்தில்நாதன், கார்த்திக், கண்ணன், சண்முகவேல் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய சதிஷ், பாடாலிங்கம், சங்கரபாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்கள் கல்லு£ரி மாணவர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்