கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு: நெல்லையில் தீக்குளித்த தி.மு.க. தொண்டர் சாவு
கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட வேதனையில் நெல்லையில் தீக்குளித்த தி.மு.க. தொண்டர் பரிதாபமாக இறந்தார்
நெல்லை,
கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட வேதனையில் நெல்லையில் தீக்குளித்த தி.மு.க. தொண்டர் பரிதாபமாக இறந்தார்.
தி.மு.க. தொண்டர் தீக்குளிப்புநெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனி மகிழ்ச்சி நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 50). இவர் நெல்லை மாநகர 27–வது வார்டு தி.மு.க. உறுப்பினராக இருந்து வந்தார். மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்.
சமீபத்தில் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை மோசமான நிலைக்கு சென்றது. அதை அறிந்த சங்கர், மிகவும் வேதனை அடைந்து மனசோர்வுடன் காணப்பட்டார்.
கடந்த 30–ந் தேதி கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் மனவேதனை அடைந்த சங்கர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய அவர் வலியால் துடிதுடித்து அலறினார். உடனே அவரை வீட்டில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்தினரும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சாவுஇந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பலனின்றி நேற்று காலையில் சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், கலா, முத்துலட்சுமி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
சங்கரின் உடலுக்கு தி.மு.க. மாவட்ட அவைதலைவர் வேலு என்ற சுப்பையா, இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி, வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.