மேலும் ஒரு கலப்பட எண்ணெய் ஆலைக்கு ‘சீல்’

திண்டுக்கல்லில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் ஒரு கலப்பட எண்ணெய் ஆலை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2018-08-01 21:45 GMT
திண்டுக்கல்,


திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் பிரபல தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த வாரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கலப்பட எண்ணெய் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 11 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெயை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆலையையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இந்தநிலையில், நந்தவனப்பட்டி அருகே மாடர்ன் நகரில் உள்ள சிவானந்தம் என்பவருக்கு சொந்தமான ஆலையிலும் கலப்பட எண்ணெய் தயாரிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் சந்திரமோகன், சரண்யா உள்ளிட்டோர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த ஆலையில் சமையலுக்கான எண்ணெய் தயாரிப்பதற்கே உரிமம் உள்ளது.

ஆனால், பூஜைக்கு பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் கலப்பட எண்ணெய் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அங்கிருந்த 140 லிட்டர் கலப்பட எண்ணெய் மற்றும் எண்ணெயை அடைத்து விற்க வைத்திருந்த 21 ஆயிரம் பாலித்தீன் பாக்கெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த ஆலை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்