ஜனாதிபதி தேர்தலை தவிர அனைத்து வாக்கெடுப்பிலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடியும்

ஜனாதிபதி தேர்தலை தவிர அனைத்து வாக்கெடுப்பிலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடியும் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-08-01 22:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்றபின் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

3 நியமன எம்.எல்.ஏ.க்களிடம் முதலில் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் பெறவில்லை. இதை சபாநாயகரிடம் தெரிவித்ததையடுத்து கையொப்பம் பெற்றுக் கொண்டனர். பயம் காரணமாக ஓட்டுரிமையை பறித்துள்ளனர். 1963–ம் ஆண்டு யூனியன் பிரதேச சட்டப்படி ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து, அனைத்து வாக்கெடுப்பிலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடியும்.

திட்டமிட்டு, அவசர, அவசரமாக அனந்தராமன் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் யாரையும் பேச விடாமல் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இது மக்கள் விரோத செயல்.

எங்களை உள்ளே விடாமல் தடுத்ததால் மத்திய அரசுக்கு நாங்கள் பாலமாக இருப்பதில் முட்டுக்கட்டையாக இருந்தது. இனி நாங்கள் புதுச்சேரி மற்றும் தேசிய வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு சபாநாயகர் மதிப்பு அளித்திருப்பதை வரவேற்கிறோம். எங்களை பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்களாக பார்க்கக் கூடாது. தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் மாநில வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

எங்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்று கொண்டுவந்த தீர்மானம் தேவையற்ற வி‌ஷயம். அரசு சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொண்டுள்ளது. அனந்தராமன் கொண்டுவந்த தீர்மானத்தை அனுமதித்து இருக்கக்கூடாது. சபாநாயகர், முதல்–அமைச்சர் மக்கள் பிரச்சினைகளை பேசாமல், அற்ப அரசியலுக்காக பேரவையை பயன்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சங்கர், செல்வகணபதி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்