இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும், அனைத்து கட்சியினர் கோரிக்கை
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை,
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மாவட்ட கலெக்டர் ஹரிகரன், எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அதன்பிறகு கலெக்டர் ஹரிகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்ற விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கார் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டருடன் கோவை நகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவும் உடன் சென்றார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர்துரை மற்றும் அந்த கட்சியை சேர்ந்தவர்களும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
தி.மு.க.வை சேர்ந்த குறிச்சி பிரபாகரன், ம.தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் வே.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி முகமது ரபீக், த.மு.மு.க.வை சேர்ந்த முகமது பசீர் மற்றும் அனைத்து கட்சியினர் கலெக்டர் ஹரிகரனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும். தினந்தோறும் அந்த பகுதியில் விபத்து அதிகரித்து வருவதால் 24 மணிநேரமும் போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். சாலையை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.