அரசு அலுவலர்களுக்கு பேரிடர் பாதுகாப்பு பயிற்சி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பேரிடர் கால பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு அலுவலர்களை கொண்டு 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது மற்றும் பிறரை காப்பாற்றுவது தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மணிகண்டன், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தீத்தடுப்பு பயிற்சியாளர் மரியம் மைக்கேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக வருகிற 6-ந்தேதி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. இதன் முன்னோடியாக இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு பேசும் போது கூறியதாவது:-
கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களை கொண்டே பேரிடர் கால மீட்பு பணிக்கு 9 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழிப்புணர்வு குழு, தீ எச்சரிக்கை குழு, வெளியேற்றுதல் குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு, முதலுதவி குழு, தீத்தடுப்பு குழு, இடப்பாதுகாப்பு குழு, போக்குவரத்து மேலாண்மை குழு, ஊடக மேலாண்மை குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வழக்கமாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் செய்வார்கள். வருகிற 6-ந்தேதி அரசு அலுவலர்களில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரே ஒத்திகை நடத்த உள்ளனர்.
பணியிடங்களில் இடர் வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும். மின்கசிவு மற்றும் பிற காரணங்களால் தீ விபத்து, பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதற்காக கவனத்தை ஈர்க்கும் வகையில் தீக்குளித்தல், மின்தடை காரணமாக லிப்ட் இயங்காமல் நின்று விடுதல், நில நடுக்கம், இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளின் போது ஒவ்வொரு பணியாளரும் பாதுகாப்பாக சூழ்நிலையை உருவாக்குவதற்கு முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 80 இடங்களில் தீயணைப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தரைத்தளம் மற்றும் 2-வது தளத்தில் தீ விபத்தை அறிவிக்கும் ஒலிப்பான் பொருத்தப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் பயிற்சி பெற்ற அலுவலர்கள் துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயிற்சியில் தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.