அ.தி.மு.க. பிரமுகரை கண்டித்து ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. பிரமுகரை கண்டித்து ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி 4–வது மண்டல உதவி ஆணையாளர் அசோக்குமாரை அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி ஊழியர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் கலந்துகொண்டு அ.தி.மு.க. பிரமுகரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து உதவி ஆணையாளர் அசோக்குமார் கூறியதாவது:–
ஈரோடு காசிபாளையம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கடந்த 6 மாதங்களாக 4–வது மண்டல அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார். அவர் கோரிக்கை வைக்கும்போது குறைகளை நிவர்த்தி செய்து வருகிறோம். ஆனால் அனைத்து திட்டப்பணிகளையும் தான் கூறுவதைபோல் செய்ய வேண்டும் என்று மிரட்டுகிறார்.
அதிகாரி என்றும் பாராமல் என்னையும், அனைத்து பணியாளர்களையும் ஒருமையில் பேசுவதால் எங்களுக்கு மனகவலை ஏற்பட்டு உள்ளது. மாநகராட்சி நிர்வாகமே அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளதைபோல் செயல்படுகிறார். எனவே அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.