பெங்களூருவில் நடுரோட்டில் பயங்கரம் முன்விரோதத்தில் வாலிபர் வெட்டி கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெங்களூருவில் முன்விரோதத்தில் நடுரோட்டில் வைத்து வாலிபரை வெட்டி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Update: 2018-08-01 21:30 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் முன்விரோதத்தில் நடுரோட்டில் வைத்து வாலிபரை வெட்டி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வாலிபர் வெட்டி கொலை

பெங்களூரு வால்மீகி நகர் அருகே வசித்து வந்தவர் சையத் அமீன் (வயது 22). இவர், கலாசிபாளையம் பம்புபஜாரில் உள்ள இரும்பு பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கடையில் இருந்து அவர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பம்புபஜார் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மநபர்கள் சையத் அமீனை வழிமறித்தார்கள். பின்னர் திடீரென்று மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சையத் அமீனை சரமாரியாக வெட்டினார்கள்.

உடனே மர்மநபர்களிடம் இருந்து தப்பித்து அவர் ஓடினார். ஆனால் அவரை விடாமல் மர்மநபர்கள் விரட்டி சென்று பிடித்து அரிவாளால் வெட்டினார்கள். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த சையத் அமீன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக செத்தார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுபற்றி அறிந்ததும் கலாசிபாளையம் போலீசார் விரைந்து வந்து சையத் அமீனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் தகவல் கிடைத்ததும் மேற்கு மண்டல துணை போலீஸ் கமி‌ஷனர் ரவி சென்னன்னவரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு சையத் அமீன், அவரது சகோதரர் இருவரும் சிலருடன் சண்டை போட்டதாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் மர்மநபர்கள் சையத் அமீனை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கலாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். நடுரோட்டில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்