சென்னையில் ரூ.15 கோடி நில மோசடி புகாரில் 10 பேர் அதிரடி கைது
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை மோசடி செய்ததாக 10 பேரை நில மோசடி தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை மோசடி செய்துவிட்டதாக தனித்தனியாக 5 பேர் கொடுத்த புகாரில் 10 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் மல்லிகா மேற்பார்வையில், உதவி கமிஷனர் ராஜேந்திரகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த சவுமினி என்பவரின் தாயாருக்கு சொந்தமான 12 ஆயிரம் சதுரஅடி நிலம், சென்னை சோழிங்கநல்லூரில் இருந்தது. இந்த நிலத்தை அபகரித்ததாக கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த அப்துல் சபீக், சைதாப்பேட்டையைச் சேர்ந்த மார்ட்டீன் ஆகியோர் கைதானார்கள். இதேபோல இந்திரா நகரைச் சேர்ந்த சிவராம் என்பவருக்கு சொந்தமான 9,600 சதுர அடி நிலம் பள்ளிக்கரணை பகுதியில் இருந்தது. இந்த நிலத்தை மோசடி செய்ததாக திருவொற்றியூரைச் சேர்ந்த கண்ணன், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜீகாராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள உமா என்பவருக்கு சொந்தமான 3,600 சதுரஅடி நிலத்தை அபகரித்ததாக, ஜெயராமகனி என்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வெம்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரா என்பவரின் 1.16 ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டது. இந்த வழக்கில் திருவான்மியூரைச் சேர்ந்த ராஜா என்பவர் கைதானார்.
அதேபோல சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் ஸ்ரீராமுலு என்பவருக்கு சொந்தமான 7,319 சதுர அடி நிலம் மோசடிக்குள்ளானது. இந்த வழக்கில் ஸ்ரீதர் என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 10 பேரும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள நிலமும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.