திருவள்ளூர் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மெக்கானிக் சாவு
திருவள்ளூர் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் மெக்கானிக் ஒருவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 38). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். நேற்று ஜெயக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவர் திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் முனீஸ்வரன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி தொழிலாளர்களை ஏற்றி வந்த தனியார் நிறுவன பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் ஏறி நின்றது.
இதில் பஸ் டிரைவர் உள்பட 30 பேர் காயமின்றி உயிர் தப்பினர். டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.