சாலையோர பாழடைந்த கிணற்றில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த விவசாயி பலி
சாலையோர பாழடைந்த கிணற்றில் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்யாறு,
வெம்பாக்கம் தாலுகா சீமளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35), விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நிலத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வடஇலுப்பையில் இருந்து பிரம்மதேசம் கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அந்த சாலை வழியாக ராஜேந்திரன் சென்றபோது, சாலையில் கொட்டி வைத்திருந்த ஜல்லிகற்கள் மீது ஏறி நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையோரத்தில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் சென்று உடலை மீட்டனர். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லவிடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெம்பாக்கம் தாசில்தார் சுபேஷ்சந்தரிடம், இறந்தவர் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் சாலை உள்ளதால் தான் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் சுபேஷ்சந்தர் உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள், உடலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.