சோழவந்தான் அருகே 3 வயது குழந்தை கொலை; பிணம் கிணற்றில் வீச்சு

சோழவந்தான் அருகே 3 வயது குழந்தையை கொன்று கிணற்றில் வீசி சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-07-31 22:30 GMT

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பேட்டை கிராமம் இரும்பாடி செல்லும் வழியில் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. அங்குள்ள கிணற்றில் ஆண் குழந்தை பிணமாக மிதந்தது.

இதுதொடர்பாக பேட்டை கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லுர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் வந்து, கிணற்றில் இறங்கி குழந்தையின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இறந்த குழந்தைக்கு 3 வயது இருக்கும். அந்த குழந்தை சாவுக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த குழந்தையை கொலை செய்து, உடலை கிணற்றில் வீசி இருக்கலாம் என தெரியவந்தது.

அது யாருடைய குழந்தை என தெரியவில்லை. எனவே, குழந்தையை வேறு பகுதியில் இருந்து கடத்தி வந்து கொலை செய்து கிணற்றில் வீசினார்களா அல்லது அந்த பகுதியை சேர்ந்த குழந்தையா என போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3 வயது குழந்தை கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்