ஊட்டியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

ஊட்டி நகர நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

Update: 2018-07-31 22:30 GMT

ஊட்டி,

ஊட்டி அருகே முள்ளிக்கொரை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சாலை, மின்சாரம், குடிநீர், தனிநபர் கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா? என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். பின்னர் அப்பகுதி மக்களை கலெக்டர் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைக்கேட்ட கலெக்டர், வீட்டுமனைபட்டா கிடைக்காதவர்கள் முறையாக வருவாய் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். பட்டா உள்ளவர்கள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெற்று வீடுகள் கட்டி கொள்ள மாவட்ட நிர்வாகத்தை அணுகி பயன் பெறலாம் என கூறினார்.

ஊட்டியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து நகராட்சி தூய்மை காவலர்களிடம் நேரில் வழங்க வேண்டும். இதற்காக தூய்மை காவலர்கள் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக வருகின்றனர். அவர்களிடம் பொதுமக்கள், வியாபாரிகள் குப்பைகளை வழங்க வேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஊட்டி மத்திய பஸ் நிலையம், லோயர் பஜார் உள்ளிட்ட பகுதியில் செல்லும் கழிவுநீர் கால்வாயை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் கால்வாயை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பஸ் நிலையம் மற்றும் நகர நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் நடைபாதையில் கடைகள் வைக்க அனுமதிக்க கூடாது என நகராட்சி நிர்வாகத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்