சென்னிமலை அருகே விவசாயி வீட்டில் பீரோவை உடைத்து ரூ.2 லட்சம் ரொக்கம்; 4 பவுன் நகை திருட்டு
சென்னிமலை அருகே விவசாயி வீட்டில் பீரோவை உடைத்து ரூ.2 லட்சம் ரொக்கம், 4 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சென்னிமலை,
சென்னிமலை அருகே உள்ள தோப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 58). விவசாயி. அவருடைய மனைவி காந்திமதி (50). இவர்களுடைய மகன் கார்த்திகேயன் (30). ஈங்கூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
கந்தசாமி விவசாயம் செய்வதோடு, திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள ஒரு மளிகை கடையிலும் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை கந்தசாமியும், கார்த்திகேயனும் வேலைக்கு சென்றுவிட்டார்கள். காந்திமதி பக்கத்து வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து காந்திமதி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு வாசலின் கொடியில் காயப்போட்டு இருந்த வெள்ளை வேட்டி, கதவை மறைத்தபடி தொங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த காந்திமதி வேட்டியை விலக்கிவிட்டு பார்த்தபோது, கதவின் தாழ்பாள் நெம்பி திறக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே ஓடிச்சென்று பார்த்தார். அப்போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 மோதிரம், ஒரு சங்கிலி என 4 பவுன் நகையும், வீடுகட்டுவதற்காக ஏலச்சீட்டில் எடுத்து வைத்திருந்த ரூ.2 லட்சமும் காணவில்லை.
யாரோ மர்ம நபர்கள் நைசாக கதவின் தாழ்பாளை நெம்பி உள்ளே நுழைந்து, பீரோவையும் உடைத்து நகையையும், பணத்தையும் திருடிச்சென்றுள்ளார்கள். இதுபற்றி உடனே கணவர் கந்தசாமிக்கும், மகன் கார்த்திகேயனுக்கும் காந்திமதி தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் விரைந்து வந்து பார்த்த கந்தசாமி உடனே சென்னிமலை போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கந்தசாமியின் வீட்டு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்த விவசாயி ஈஸ்வரன் என்பவர் போலீசில், திருட்டு நடந்த அதே நேரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அவரிடம் டி.விக்கு கேபிள் இணைப்பு கொடுக்க வந்துள்ளோம் என்று கூறியதாகவும், அதற்கு ஈஸ்வரன் கேபிள் இணைப்பு கொடுக்க வேறு ஒருவர்தானே வருவார்? என்று கேட்டதற்கு அவர் முன்னுக்குபின் முரணாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் கூறினார். அதனால் இந்த சம்பவத்தில் ஈடுபட 2 பேர் வந்திருக்கலாம், ஒருவர் வெளியே யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட மற்றொருவர் உள்ளே நுழைந்து நகையையும், பணத்தையும் திருடிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே வீட்டில் திருட்டு நடந்த தகவலை மகன் கார்த்திகேயனுக்கு காந்திமதி தெரிவித்தபோது, அவர் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வேகமாக விரைந்துள்ளார். சென்னிமலை–காங்கேயம் ரோட்டில் அவர் வந்தபோது, சைக்கிளில் ஒருவர் குறுக்கே வந்துள்ளார். இதனால் தடுமாறி கீழே விழுந்து கார்த்திகேயனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.