குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு தேவநதியை தூர்வார வலியுறுத்தல்

தேவநதியை தூர்வார வலியுறுத்தி நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2018-07-31 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் கூறி மனு அளித்தனர்.

முன்னதாக பாலையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கோரிக்கை குறித்து பேச வாய்ப்பு வழங்காததாலும், தேவநதியை தூர்வார வலியுறுத்தியும் கூட்டத்தில் இருந்து விவசாயிகளின் ஒரு பகுதியினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-

காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் குரு.கோபிகணேசன்:- குறுவை தொகுப்பு திட்டத்தில் இந்த ஆண்டு தமிழக அரசு ரூ.115 கோடி ஒதுக்கியுள்ளது. குறுவை தொகுப்பு திட்டத்தில் நிலம் இல்லாதவர்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பம்புலம் கிராம விவசாயிகள் சங்க தலைவர் மணியன்:- வேதாரண்யம் ஒன்றியம் ஆயக்காரன்புலம்-3 கைக்காட்டி பாலம் கட்டுவதால் மானங்கொண்டான் ஆற்றில் தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதனூர், அண்டார்காடு, கோவில் தாழ்வு, கடினல்வயல் ஆகிய கிராமங்களுக்கு தண்ணீர் வரவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து மானங்கொண்டான் ஆற்றில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை, திருவாரூர் மாவட்ட ஆற்றுபாசன சங்க தலைவர் ராமகிருஷ்ணன்:- நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீரை காப்பாற்ற அரசு சிறப்பு நிதி ஒதுக்கி,வல்லுனர்களை கொண்டு நிலத்தடி நீர் அதிக அளவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். எந்தவித பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் மானியங்கள் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி:- பழைய விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து, புதிதாக கடன் வழங்க வேண்டும். விதைகள் தரமானதாக தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகையில் இருந்து சங்கமங்கலம் செல்லும் சாலையில் இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம்:- தமிழகத்திற்கு குடிமராமத்து பணிகளுக்காக ரூ.328 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது பணிகள் நடைபெற்ற இடங்களில் பணி பாதியில் நிறுத்தப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் தொடங்கப்படாத நிலையிலேயே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முறையாக தூர்வாரப்படாததால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் இன்றுவரை முழுமையாக வந்து சேரவில்லை. எனவே குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்தும், செலவிடப்பட்டுள்ள நிதியின் விவரம் குறித்தும், மீதி இருப்பில் உள்ள நிதி குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்