அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் போலீஸ் காவல் முடிந்து 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

சீர்காழியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் போலீஸ் காவல் முடிந்து 3 பேர் சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Update: 2018-07-31 23:00 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(வயது47). இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராகவும், முதல்நிலை ஒப்பந்ததாரராகவும் இருந்தார். கடந்த 23-ந் தேதி காலை சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரமேஷ்பாபு கொலை தொடர்பாக கடந்த 25-ந் தேதி சேலம் கோர்ட்டில் சீர்காழி தாலுகா புதுத்துறை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன்(28), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்பிரபு(34), புதுச்சேரி மேல்காத்தமங்களம் தேனி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார்(22) ஆகிய 3 பேர் சரணடைந்தனர். சரணடைந்த 3 பேரும் சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

சரணடைந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதி யுவராஜ், சரணடைந்த பார்த்திபன், அருண்பிரபு, பிரேம்குமார் ஆகிய 3 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். கடந்த 27-ந் தேதி மூவரையும் அழைத்து சென்ற போலீசார் விசாரணை முடிந்து நேற்று மாலை சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ் முன்பு பார்த்திபன், அருண்பிரபு, பிரேம்குமார் ஆகிய 3 பேரையும் ஆஜர்படுத்தினர். இவர்களை

15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பார்த்திபன் உள்ளிட்ட மூவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பார்த்திபன், அருண்பிரபு, பிரேம்குமார் ஆகிய 3 பேரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்