தி.மு.க. தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை அதிர்ச்சியில் 8 பேர் மரணம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மனம் உடைந்த தி.மு.க. தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், 8 பேர் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.

Update: 2018-07-30 22:12 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை வாணிவிலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கங்கன் (வயது 60). தீவிர தி.மு.க. தொண்டரான இவர், வட்ட பிரதிநிதியாக இருந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது கொண்ட பற்றின் காரணமாக தனது 2 மகன்களுக்கும் உதயசூரியன், உதயன் என்ற பெயர்களை வைத்தார்.

இந்தநிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தகவல்களை டி.வி.யில் பார்த்து கங்கன் மனம் உடைந்தார்.

நேற்று முன்தினம் இரவு இது தொடர்பான செய்திகளை தனது வீட்டில் டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த கங்கன், திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு கனிராவுத்தர் குளம் காந்தி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 38). தி.மு.க. தொண்டர். நேற்று முன்தினம் இரவு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக டி.வி.யில் வெளியான செய்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி இறந்தார்.

இதேபோல் பெருந்துறை அருகே உள்ள கிழக்கு ஆயிக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தன அப்பு (49). தி.மு.க. உறுப்பினர். திருமணம் ஆகாதவர். நேற்றுமுன்தினம் இரவு டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை குறித்த செய்தியை பார்த்த ஜனார்த்தன அப்பு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் தூங்க சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலை அவரது உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் முருகன் (65). தி.மு.க. தொண்டர். நேற்று முன்தினம் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளை டி.வி.யில் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

தேனி மாவட்டம் காமக்காபட்டியை சேர்ந்தவர் மூக்கையா (65). நெல் வியாபாரியான இவர், தி.மு.க. முன்னாள் வார்டு செயலாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு கருணாநிதியின் உடல்நிலை மோசமானது பற்றிய செய்தியை டி.வி.யில் பார்த்தபோது மூக்கையாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர், ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூக்கையா இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (80). இவர் தி.மு.க. கிளைச்செயலாளராக இருந்து வந்தார். டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை பற்றி ஒளிபரப்பான செய்திகளை தொடர்ந்து பார்த்து கொண்டு இருந்த கணேசன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் 7-வது வார்டை சேர்ந்தவர் நல்லுசாமி (60). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தி.மு.க. தொண்டரும் ஆவார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு கருணாநிதி உடல்நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளை கேள்விப்பட்டு, அது பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நல்லுசாமி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பிச்சைத்தலைவன்பட்டியை சேர்ந்தவர் கோயில்பிள்ளை (75). முன்னாள் தி.மு.க. கிளை செயலாளர். நேற்று காலை அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு கோயில்பிள்ளை சென்றார். அங்கு டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை குறித்த செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார் (59). தி.மு.க. தொண்டர். கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு மனக்கவலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மேலும் செய்திகள்