கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகன், மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் முத்தையால் நகரில் வசித்து வருபவர் கோபி. மனைவி வள்ளியம்மாள் (வயது 28). இவர் தனது மகள் சுவேதா (10), மகன் மேகநாதன் (8) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த வள்ளியம்மாள், தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கினார்கள். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.
அதன் பிறகு வள்ளியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
நானும் எனது கணவர் கோபியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எனது கணவருக்கு கடந்த 2014-ம் ஆண்டில் குவைத் நாட்டில் வேலை கிடைத்தது. அவர் வெளிநாட்டிற்கு செல்ல ரூ.1½ லட்சம் தேவைப்பட்டது. நான் எனது நகைகளை அடமானம் வைத்தும், தெரிந்தவர்கள் சிலரிடம் கடன் பெற்றும் ரூ.1½ லட்சத்தை எனது கணவரிடம் கொடுத்ததன்பேரில் அவர் குவைத்துக்கு வேலைக்கு சென்றார். அதன் பிறகு குவைத்தில் இருந்து எனது கணவர் மாதந்தோறும் அனுப்பிய பணத்தை வைத்து கடனை அடைத்து விட்டேன். இந்நிலையில் குவைத்திற்கு சென்ற எனது கணவர் கோபி, கடந்த 13.6.18 அன்று ஊருக்கு வந்தார். தற்போது எனது கணவர் நல்ல வேலையில் இருப்பதை தெரிந்துகொண்ட அவரது சகோதரிகளில் ஒருவர் அவர்களது மகளை எனது கணவருக்கு 2-வதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்து என்னை பற்றி தவறான தகவல்களை எனது கணவரிடம் கூறி வருகின்றனர். அதோடு என்னுடைய கணவரை எங்கள் வீட்டிற்கு அனுப்பாமல் அவர்களது வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர்.
இதுகுறித்து நான் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே எனது கணவர் வருகிற 13-ந் தேதி எங்களை ஏமாற்றிவிட்டு மீண்டும் குவைத்திற்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு குவைத் சென்று விட்டால் அவரை எங்களால் சந்திக்க முடியாது. நானும், எனது பிள்ளைகளும் உயிரை மாய்த்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனவே தாங்கள் இதுகுறித்து விசாரித்து எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வள்ளியம்மாளின் கணவர் கோபி(34), அவரது அக்காள்கள் கலா(35), சிவகாமி(40), உறவினர் மோகன்ராஜ்(28) ஆகிய 4 பேர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, கோபியை கைது செய்தனர். மேலும் வள்ளியம்மாள் மகன், மகளுடன் தீக்குளிப்பதற்கு மண்எண்ணெய் வாங்கி கொடுத்து அனுப்பிய சாலாமேட்டை சேர்ந்து அவரது சகோதரர் லோகநாதன்(26) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.