போதை ஊசிகளுடன் சிக்கிய என்ஜினீயர் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு

நாகர்கோவிலில் போதை ஊசிகளுடன் சிக்கிய என்ஜினீயர் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-30 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கிறிஸ்டோபர் நகரில் நேற்று காலை ஒரு டெம்போ டிரைவரை, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கினார். அந்த வழியாக சென்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பேர், இதை பார்த்து அந்த வாலிபரை தட்டிக் கேட்டனர். உடனே அந்த வாலிபர், டெம்போவில் வெடிகுண்டு இருப்பதாகவும், டெம்போ டிரைவர் அதனை கடத்திச் செல்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் டிரைவர் டெம்போவில் வெங்காய மூடைகள் இருப்பதாக கூறியுள்ளார்.

உடனே அந்த வாலிபரை பிடிக்க மாணவர்கள் முயன்றனர். அந்த வாலிபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டினார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த வாலிபர் தான் வைத்திருந்த ஸ்கூட்டரில் தப்பிச் சென்றார். ஆனாலும் மாணவர்கள் அந்த வாலிபரை துரத்திச் சென்று பார்வதிபுரம் பகுதியில் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவர்கள் பிடித்து வைத்திருந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த நபர் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அந்த துப்பாக்கி பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டரை சோதனை செய்தனர். அந்த ஸ்கூட்டரில் 4 போதை மருந்து ஊசிகள், 6 கத்திகள், 2 செல்போன்கள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதை மருந்து ஊசி இருந்ததால் அந்த வாலிபரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனாலும் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறிக்கொண்டே இருந்தார்.

அவரை போலீசார் சோதனை செய்தனர். அவரது சட்டப்பையில் ஒரு முகவரி இருந்துள்ளது. அந்த முகவரியை தொடர்பு கொண்டு பேசியபோது அந்த வாலிபர் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்கான ஆவணங்களையும், சிகிச்சை பெறுவதற்கான மருந்து, மாத்திரைகளையும் அந்த வாலிபரின் தந்தை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து காட்டினார்.

மேலும் அந்த வாலிபரை பற்றி அவருடைய தந்தை கூறுகையில், என்னுடைய மகன் என்ஜினீயரிங் படித்துள்ளார். போதை பழக்கத்துக்கு ஆளானதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டது. அதற்கு கேரளாவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறேன். தினமும் மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும். கடந்த 2 நாட்களாக மருந்து மாத்திரை சாப்பிடவில்லை. இதனால் நோய் பாதிப்பு அதிகமாகி இருப்பதாகவும், அதனால் அந்த வாலிபர் இப்படி நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் என்ன செய்வது என்பது தெரியாமல் பொம்மை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் வெளியே வந்திருக்கிறார் என்றும், அவர் வைத்திருந்த கத்திகள் கல்லூரியில் படிக்கும் போதே சேகரித்து வைத்திருந்தது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் போதை மருந்து ஊசிகள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்