திருப்பூரில் கிரேன் மூலம் தூக்கிச்செல்லப்பட்ட போது மின் கம்பம் இடித்ததில் மொபட்டில் சென்ற பனியன் நிறுவன தொழிலாளி பலி

கிரேன் மூலம் தூக்கிச்செல்லப்பட்ட மின்கம்பம் மொபட்டில் சென்ற பனியன் நிறுவன தொழிலாளி தலையில் இடித்ததில் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-30 21:45 GMT

நல்லூர்,

திருப்பூர்–காங்கேயம் ரோடு விஜயாபுரம் அருகே உள்ள அங்காளம்மன் நகர் 2–வது வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 52). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி காளகேஸ்வரி (48). இவர்களுக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், ஜெகதி என்ற மகளும் உள்ளனர். ரவிச்சந்திரன் திருப்பூரில் உள்ள கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்துவருகிறார்.

இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற கோபாலகிருஷ்ணன் மதிய சாப்பாட்டுக்குவீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் தனது மொபட்டில் மதியம் 2 மணி அளவில் பனியன் நிறுவனத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

காங்கேயம் ரோட்டில் நல்லிக்கவுண்டர் நகர் அருகே உள்ள மீன் பண்ணை பக்கம் வந்த போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீதியில் இருந்து மின்கம்பத்தை தூக்கியபடி வந்த கிரேன் ஒன்று காங்கேயம் ரோட்டிற்கு திரும்பியது. இந்த வாகனத்தை திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்த சிவபெருமாள் (23) என்பவர் ஓட்டிவந்தார்.

அப்போது முன்னால் மொபட்டில் சென்று கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனின் தலையின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மின்கம்பம் இடித்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்தார். இதை பார்த்த கிரேன் டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பிஓடிவிட்டார்.

விபத்தை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கோபாலகிருஷ்ணனை மீட்டனர். பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கோபாலகிருஷ்ணன் அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் கூறினார்கள்.

ஆனால் திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த மூன்று 108 ஆம்புலன்சுகளில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோபாலகிருஷ்ணனை அழைத்து செல்வதற்கான போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் வேறு ஒரு 108 ஆம்புலன்சு அரசு மருத்துவமனைக்கு வந்தது.

இதனால் சுமார் 2 மணி நேர தாமதத்துக்கு பின்னர் அந்த ஆம்புலன்சில் கோபாலகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் மீண்டும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கோபாலகிருஷ்ணனை கொண்டு செல்வதற்கு 108 ஆம்புலன்சு ஏற்பாடு செய்ததில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே அவர் இறந்ததாக புகார் எழுந்தது. இதை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் நின்றிருந்த ஆம்புலன்சு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் நின்றிருந்த மூன்று ஆம்புலன்சுகளில் உயிர்காக்கும் போதிய உபகரணங்கள் இல்லை என்பதாலும், அந்த நேரத்தில் 108 ஆம்புலன்சு டிரைவர்கள் இல்லாததுமே கோபாலகிருஷ்ணன் இறப்புக்கு காரணம் என்று கூறி கோபாலகிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருப்பூர் ஊரக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த சம்பவத்துக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் மற்றும் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசு ஆகியோர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி தலைமறைவான கிரேன் டிரைவர் சிவபெருமாளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்