திருப்பூர் மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து உண்ணாவிரதம் நடத்த முடிவு

திருப்பூர் மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-07-30 22:30 GMT

திருப்பூர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதனால் திருப்பூர் மாநகராட்சி, உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில் நகராட்சிகளிலும் சொத்து வரியை 50 சதவீதம் உயர்த்திக்கொள்ள சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தனி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் பின்னலாடை தொழில் நிலைகுலைந்து தள்ளாடி வருகிறது. மாநகராட்சி மூலமாக மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில் சொத்து வரியை உயர்த்தி மக்கள் தலையில் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளாட்சி தேர்தலை நடத்தி, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உரிய நிதியை வழங்கி பணிகள் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சொத்து வரியை குறைக்க தமிழக அரசும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி தனி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2–ந் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி தனி அதிகாரிகளையும் சந்தித்து மனு அளிப்பது, மாவட்டத்தின் பல பகுதிகளில் வருகிற 27–ந் தேதி திரளானவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்