வாலாந்தரவை இரட்டை கொலை சம்பவம் 14 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்த நிலையில் அவை அனைத்தையும் ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுஉள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையில் கடந்த மே மாதம் 20–ந்தேதி வாலிபர்கள் பூமிநாதன், விஜய் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மாவட்டத்தில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் 20 பேர் மீது வழக்குபதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.
கொடூரமாக நடந்த இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கைதான 20 பேரில் 14 பேர் மீது அடுத்தடுத்து குண்டர் சட்டம் பாய்ந்தது. குண்டர் சட்டம் பாய்ந்த நபர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மீதம் உள்ளவர்கள் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்த நிலையில் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பில் குண்டர் சட்ட கைதினை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்டத்தின் கீழ் 14 பேர் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே கைதானவர்களில் 11 பேர் ராமநாதபுரம் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு ராமநாதபுரம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.