தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாப சாவு, டாக்டர்கள் மீது தாயார் புகார்
மதுரை செக்கானூரணி அருகே தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்து போனார்.
செக்கானூரணி,
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தீபன். இவருடைய மனைவி ஜமுனா (வயது 23). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜமுனா, பிரசவத்திற்காக செக்கானூரணியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்திருந்தார்.
இதற்கிடையே அவருக்கு திடீரென பிரவச வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவருக்கு உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்தது. இதனால் அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் வரும் வழியிலேயே இறந்தது தெரிய வந்தது. மேலும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டது.
இதுகுறித்து ஜமுனாவின் தாய் மலைமணி செக்கானூரணி போலீசில் புகார் அளித்தார். அதில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக நடந்ததால் தான் ஜமுனா இறந்தார் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.