கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2017–ம் ஆண்டு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
எனவே, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாளை (புதன்கிழமை) முதல் மாவட்டத்தில் கூடுதல் பொறுப்புகளை பார்ப்பதில்லை என்று கூறியும் சமீபத்தில் நடந்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.
அதன்படி தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பலர் நேற்று மாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை தாங்கினார். போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநில செயலாளர் முருகேஸ்வரி, மாவட்ட செயலாளர் நாகலட்சுமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.
போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. முடிவில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.