தாயிடம் இருந்து பிரித்து வளர்க்கப்படும் 2 சிங்கக்குட்டிகள்

ஈன்ற குட்டிகளை தின்னும் பழக்கம் கொண்ட தாயிடம் இருந்து 2 சிங்கக்குட்டிகளை பிரித்து தனியாக வளர்த்து வருவதாகவும், தற்போது அவைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் பன்னரகட்டா உயிரியல் பூங்கா அதிகாரி தெரிவித்தார்.

Update: 2018-07-29 23:53 GMT
பெங்களூரு,

பெங்களூரு பன்னரகட்டாவில், உயிரியல் பூங்கா உள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் யானை, சிங்கம், மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு சங்கர்(வயது 6), சனா(8) என்ற பெயர் கொண்ட ஒரு ஜோடி சிங்கம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் தாய் சிங்கமான சனா, தான் ஈன்ற குட்டிகளை தின்னும் தன்மையை கொண்டுள்ளது. கடந்த 2 முறை தான் ஈன்ற குட்டிகளை சனா தின்றது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி சனா 4 சிங்கக்குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டியை அப்போதே சனா தின்றது. இதனால் மீதமுள்ள 3 சிங்கக்குட்டிகளையும் காப்பாற்ற உயிரியல் பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, தாய் சிங்கமான சனாவிடம் இருந்து 3 சிங்கக்குட்டிகளையும் அதிகாரிகள் பிரித்தனர்.

அந்த சிங்கக்குட்டிகளை தனியாக கூண்டில் அடைத்து உயிரியல் பூங்கா ஊழியர்கள் மற்றும் கால்நடை டாக்டர்கள் கண்காணித்தனர். இந்த வேளையில் எதிர்பாராத விதமாக இன்னொரு சிங்கக்குட்டி செத்தது. இதையடுத்து, மற்ற 2 சிங்கக்குட்டிகளையும் அதிக கவனத்துடன் உயிரியல் பூங்கா ஊழியர்கள் மற்றும் கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அந்த சிங்கக்குட்டிகளுக்கு, 2 ஆடுகளில் இருந்து கிடைக்கும் பால் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பன்னரகட்டா உயிரியல் பூங்கா செயல் இயக்குனர் கோகுல் கூறுகையில், ‘தாய் சிங்கம் குட்டிகளை தின்னும் பழக்கத்தை கொண்டுள்ளது. இதனால் 2 சிங்கக்குட்டிகள் தாயிடம் இருந்து பிரித்து வளர்க்கப்பட்டு வருகிறது. தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன நிலையில் உயிருடன் உள்ள 2 சிங்கக்குட்டிகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாக சிங்கக்குட்டிகளை உயிரியல் பூங்கா ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்’ என்றார். 

மேலும் செய்திகள்